கடந்த 1-ஆம் தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் அமளியில் முடிந்தாலும், 3-ம் தேதி முதல் ஆக்கபூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றன. வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி காற்று மாசு, திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும், காரசார விவாதங்கள் நடைபெற்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், விபி-ஜி ராம் ஜி திட்டம் என மாற்றி, மக்களவையில் நேற்று மசோதா நிறைவேறியது. இதேபோல் நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த மசோதாவும், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவை அதன் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 11 மணிக்கு துவங்கியது. அப்போது, உரையாற்றிய அவர், இந்த அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், வரும் அமர்வுகளிலும், பயனுள்ள விவாதங்களை உறுப்பினர்கள் முன்வைப்பார்கள் என்று, தாம் நம்புவதாக குறிப்பிட்டார். பின்னர் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு, அவை நடவடிக்கைகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

















