திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு ஊராட்சி, கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மகேந்திரன். இவர் நான்கு சக்கர வாகனத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். மகேந்திரன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரில் உள்ள தனது சித்தப்பாவைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வேடசந்தூர் – நவாமரத்துப்பட்டி சாலையில் உள்ள சாய் பாரத் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, வேடசந்தூரில் இருந்து எதிரே வந்த ஈச்சர் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மகேந்திரன் மீது பலமாக மோதியது. விபத்தின் கோரத்தால் தலையில் பலத்த காயமடைந்த மகேந்திரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீஸார், மகேந்திரனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஈச்சர் வேன் ஓட்டுநரின் அஜாக்கிரதையான ஓட்டுதல் காரணமா அல்லது வாகனக் கோளாறா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















