இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைகளில் அதிகரித்துவரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீதம் பங்களிப்பை, தமிழ்நாடு வழங்குகிறது. இதன்மூலம் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர், இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும், 40 சதவீதம் அளவிற்கு பங்காற்றி, 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமெரிக்க வரிவிதிப்பினால் தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்பது, வெறும் பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல, ஈடு செய்யமுடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும் சவால் என்றும், முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால், திருப்பூரில் உற்பத்தியாளர்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனங்களில் 30 சதவீதம் வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவுக்கு, குறைந்து வருவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

















