சமூகநீதி பேசும் திமுக அரசு, நடைமுறையில் கோபாலபுர நீதியை மட்டுமே முன்னிறுத்துகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்கந்தல் மோட்டூர் பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இன்னும் முறையாக கட்டித் தரப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஆதார் அட்டை, பட்டா, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களையே தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு பழங்குடியினர் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தமது தந்தையின் நினைவாக வானுயர பேனா சிலை அமைப்பதற்கும், தமது மகனின் விருப்பத்திற்காக கார் பந்தயத்துக்கான சாலைகளை அமைப்பதற்கும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்டுவதில் மட்டும் அலட்சியம் காட்டுவது ஏன் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேடைகளில் சமூகநீதி குறித்து பெருமையாக பேசும் திமுக, விளம்பரங்களில் தங்களை சமூகநீதியின் காவலர்களாக காட்டிக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்து, தினமும் அவர்களை போராட்டத்தில் ஈடுபட வைக்கும் அரசாக திமுக செயல்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தத்தில், குடும்ப விளம்பரத்திற்கே முன்னுரிமை அளித்து, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை புறக்கணிக்கும் இந்த அரசின் கொள்கையை சமூகநீதி என சொல்ல முடியாது ; அது ‘கோபாலபுர நீதி’ தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















