தேனி மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாய் நீட்டிப்புக் கால்வாயில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு இன்று (17.12.2025) உத்தரவிட்டுள்ளது. இன்று (17.12.2025) முதல் வரும் 31.12.2025 வரை மொத்தம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும். வினாடிக்கு 95 கன அடி வீதம், மொத்தம் 121 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் மிக முக்கியமான இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன:
உத்தமபாளையம் வட்டம் போடி வட்டம் சுமார் 4794.70 ஏக்கர் நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறும். மழைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்த 15 நாட்கள் தண்ணீர் திறப்பானது பயிர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பெரிதும் உதவும் என இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாத சூழலில், அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துள்ளது. தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை செல்வதை உறுதி செய்யப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

















