மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்தப் பிரச்சினைக்கு மக்களிடையே ஆதரவு திரட்டப் புதிய வடிவங்களில் விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், இந்தப் பிரசாரம் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரும் கோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், “குன்றில் தீபம் ஏற்றுவோம்” என வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து பொதுவெளியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற அனுமதி பெற்று, உள்ளூர் மக்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், கொடியேற்றியும் வழிபட்டு வருகின்றனர். இந்து முன்னணியினர் இந்த டி-சர்ட் பிரசாரத்தைத் தவிர, சமூக ஊடகங்களிலும் தங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். பிரச்சார உத்திகள் குறித்து இந்து முன்னணியினர் கூறுகையில்: “திருப்பரங்குன்றம் மலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை அறிய, சமூக வலைதளத்தில் வாக்கெடுப்பு (Poll) நடத்தி வருகிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட, இந்த நடவடிக்கைக்கு ஆதரவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.” ஒவ்வொரு இந்துவும் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும், டிஸ்ப்ளே பிக்சராகவும் ‘அங்கேயே தீபம் ஏற்றுவோம்’ என்ற வாசகத்துடன் கூடிய படங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும், தன்னார்வ ரீதியாக இந்துக்கள் அனைவரும் இதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளன. “இதை ஒவ்வொரு இந்துவும் தாங்களாக முன்வந்து செய்தால், நிச்சயம் முருகன் அருளால் தீபம் ஏற்றும் கட்டாயத்திற்கு தி.மு.க. அரசு வரும்” என்று இந்து முன்னணியினர் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தத் தீவிர பிரசாரம், இந்து அமைப்புகளின் கோரிக்கைக்குச் சமூக மட்டத்தில் ஒரு வலுவான மக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.














