கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேக வாகனப் போக்குவரத்து மற்றும் விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலியையும் தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதற்கட்டமாக, நாகர்கோவில் நகரின் 4 முக்கியச் சந்திப்புகளில் ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அதிவேகத் திறன் கொண்ட பைக்குகள், சொகுசு கார்கள், அதிவேக டாரஸ் லாரிகள் ஆகியவை போக்குவரத்து விதிகளை மீறிச் செல்வதால், விபத்துகளின் எண்ணிக்கையும் உயிர் பலியும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தடம் மாறி வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில், எதிரே பைக்கில் வந்த அண்ணன்-தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு, பாலத்தின் அடியில் உள்ள வீட்டுக் காம்பவுண்ட் சுவரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்போதும், டாரஸ் லாரிகள் மற்றும் சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் முந்திச் செல்லும் வாகனங்களுக்கு இடம் கொடுக்காமலும், பின்னால் வரும் வாகனம் முந்தும் போது திடீரென வலது பக்கம் வாகனத்தைத் திருப்புவதாலும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்கின்றன. அதிவேகப் பைக்குகளில் வரும் இளைஞர்களாலும் அப்பாவிப் பாதசாரிகள் பலியாகும் நிலை உள்ளது. இந்த விபத்துகளைத் தவிர்க்க எஸ்.பி. ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, விபத்துப் பகுதிகளை ஆய்வு செய்து, மீண்டும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான பணிகளைச் செய்து வருகிறார்.
சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் பைக் ஓட்டினால், அவர்களது பெற்றோர் மீதும் வழக்கு பதியப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நகரப் பகுதிகளில் விபத்துகளைத் தவிர்க்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, நாகர்கோவில் நகரில் உள்ள 4 முக்கியச் சந்திப்புகளில் ரப்பர் டயரிலான சிறிய வேகத்தடைகள் போக்குவரத்துப் போலீசார் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் வாகனங்கள் 4 திசைகளிலும் செல்வதால், வாகனங்கள் எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்தது. தற்போது இங்கு அமைக்கப் பட்டுள்ள வேகத்தடை காரணமாக வாகனங்கள் மெதுவாகச் செல்வதால், விபத்துகளுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதேபோல், மாவட்டம் முழுவதும் படிப்படியாக ரப்பர் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையும் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















