38 வயதான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பையை வென்றது. 3 நாள்கள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ள அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில்,, தனது 70 அடி உயர உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் திறந்து வைத்தார். அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் முண்டியடித்தனர். ரசிகர்கள் வீசிய வாட்டர் பாட்டில் ஒன்று மெஸ்ஸி மீதே விழுந்தது. கடும் கோபம் அடைந்த அவர், 10 நிமிடத்திலேயே மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இதை அறிந்த, ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த வன்முறைகளுக்கு முதல்வர் மம்தா, மெஸ்ஸியிடம் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாளை மும்பை செல்லும் மெஸ்ஸி, மாலை 5:00 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் ‘பேஷன்’ நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை மறுநாள் டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

















