சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை, அன்புமணி ஆதரவாளரான பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இதனிடையே, கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை தவெக தலைவர் விஜய்க்கு வழங்கி, அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னையை அடுத்த பனையூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு, தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு ஆகிய குழுக்கள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்ட அரங்கிற்கு, பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர். அன்புமணி தலைமையில் வரும் 17 ம் தேதி சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தக்கோரி நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்து, அதற்காக கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கே.பாலு வழங்கினார்.
















