உலகப் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குட்பட்ட கோயில் மலைப்பகுதியில் உள்ள பழமையான கல்லத்தி மரத்தில் (தலைவிரிச்சான் மரம்), அண்மையில் பிறை நிலா மற்றும் நட்சத்திரம் பொறித்த சிவப்புக்கொடி புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருக்கோயில் இடத்தைக் கையகப்படுத்தும் நோக்கில் தர்கா நிர்வாகம் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, ஹிந்து மக்கள் கட்சியினர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம், இந்து-முஸ்லீம் தரப்பினரிடையே எதிர்காலத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கலாம் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் தலைமையிலான ஹிந்து மக்கள் கட்சியினர் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருப்பரங்குன்றம் கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கல்லத்தி மரம், பழங்காலத்தில் இருந்து பக்தர்களால் தலைவிரிச்சான் மரம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மரம் அமைந்துள்ள இடம் திருக்கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது. இந்த மரத்தின் அருகே சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் தர்காவின் சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவின்போது, தர்காவின் உள்ளே இருக்கும் கொடிமரத்தில் மட்டுமே பிறைக்கொடி ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், தற்போது திருக்கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் பிறைக்கொடி கட்டப்பட்டிருப்பது, இம்மரத்தையும், இதன் மூலம் திருக்கோயில் இடத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தர்கா நிர்வாகம் செயல்படுவதைக் காட்டுவதாக மனுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்கா நிர்வாகம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காததற்கு கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் சொத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 21-ஆம் தேதி அன்று தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெறவுள்ள நிலையில், அப்போது கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை இறக்கி, மீண்டும் ஏற்ற தர்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் எதிர்காலத்தில் இந்த மரமும் தர்கா நிர்வாகத்திற்குச் சொந்தம் என உரிமை கொண்டாட வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து மக்கள் கட்சியினர் மனுவில் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த முயற்சி தொடக்க நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும் என்றும், உடனே கல்லத்தி மரத்தில் உள்ள பிறைக்கொடியை அகற்ற வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் சேவல் படம் பொறித்த கொடியை (முருகப்பெருமானின் கொடி) ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, வன்முறையோ, பதற்றமோ ஏற்படுவதற்கு முன், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக, திருக்கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அடுத்தகட்டமாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















