தி.மு.க.வின் ஆரம்ப கால நிர்வாகிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.விலிருந்து விலகி, முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது புதுக்கோட்டை தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட என்னை ஊராட்சி, எண்ணை கிராமம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தி.மு.க.வின் ஆரம்பகால நிர்வாகிகள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையேற்று இந்த முடிவை எடுத்தனர்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் இ. பழ. சுப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் ராப்பூசல் பழனி, என்னை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர். விராலிமலை தொகுதியில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க.வின் அடிப்படை நிர்வாகிகள் எதிரணியில் இணைந்திருப்பது, அப்பகுதியில் அரசியல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.

















