நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியில் அதிகாலை ஒரு மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நடத்திய தாக்குதலால், உயர் அழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது. சரியான நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், யானை மற்றும் பொதுமக்கள் என யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வனத்தை ஒட்டியுள்ள புத்தூர் வயல் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில், ஒற்றைக் காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கே இருந்த ஒரு பாக்குமரத்தை யானை தனது பலத்தால் தள்ளிச் சாய்த்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பாக்குமரம், புத்தூர் வயல் பகுதியில் இருந்து மகாவிஷ்ணு கோயில் செல்லும் சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது நேராக விழுந்தது.
மரம் விழுந்த பின்னரும், மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இதனால், மின்சாரம் மரத்தின் மீது பாய்ந்து கொண்டிருந்தது. யானை தோட்டத்திலிருந்து வெளியேறாமல், அங்கேயே வெகு நேரம் நின்றது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றது. அதிகாலை நேரத்தில் வெளியே வந்த அப்பகுதி மக்கள், சாலையின் குறுக்கே மின்கம்பி மீது பாக்குமரம் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், மின்கம்பி துண்டிக்கப்படாமல், மரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதையும் அவர்கள் உணர்ந்தனர். நிலைமையின் விபரீதத்தை அறிந்த மக்கள், உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து, உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னரே, சாலையின் குறுக்கே விழுந்த பாக்குமரம் வெட்டி அகற்றப்பட்டது.
பாக்கு மரத்தைச் சாய்த்த காட்டு யானை, சாலையில் வந்து அந்த மரத்தையோ அல்லது விழுந்திருந்த பாக்குக் குலைகளையோ தொட முயன்றிருந்தால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கும். ஆனால், மின்கம்பி மீது மரம் விழுந்த பின், யானை அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றதால் யானையின் உயிர் தப்பியது. அதிகாலை நேரத்தில், மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருப்பதை அறியாமல், அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் யாராவது ஒருவர் பாக்கு மரத்தைத் தொட்டிருந்தாலும் அல்லது அதன் மீது மோதியிருந்தாலும் உயிராபத்து ஏற்பட்டிருக்கும்.
யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துவது ஒருபுறம் இருக்க, இதுபோன்று உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விபரீதச் சூழல்கள் உருவாவது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதைத் நிரந்தரமாகத் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள், மின்சார வேலி அமைத்தல் அல்லது அகழிகள் வெட்டுதல் போன்றவற்றை அரசும், வனத்துறையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனப் புத்தூர் வயல் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















