புதுடில்லி: மதுரை திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் எழுந்த விவாதத்தில், ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு மீறி வருகிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
திமுக எம்பிக்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தை சபையில் எடுத்துக்கொண்டபோது, பேசும்போது டி.ஆர். பாலு, “தமிழகத்தில் அமைதியை குழப்ப முயற்சி நடக்கிறது” என கூறி, நீதிபதி சுவாமிநாதன் குறித்த சில கருத்துகளை பதிவு செய்தார். இது நீதித்துறையை அவமதிக்கும் வகையில் உள்ளது என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டி.ஆர். பாலுவின் குறிப்பிட்ட கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
பிறகு விவாதத்தில் பதிலளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் தீபம் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. வழிபாடு நடத்த செல்வோருக்கு போலீசார் தடைவிதித்ததுடன், கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் நடந்துள்ளன. இது மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்,” என்று கூறினார்.
மேலும் அவர்: “ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டிருக்கிறது.” “சிஎஸ்ஐஎஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், தமிழ்நாடு அரசு அதை நிறைவேற்றாமல் அராஜகமாக நடந்துள்ளது.”
“போலீசார் சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய நிலையில், பக்தர்கள்மீது தாக்குதல் நடத்தி, பாஜக தலைவர்களையும் கைது செய்துள்ளனர்.”, “ஓட்டு அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மகிழ்விக்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுகிறது.”
இந்திய அரசியலமைப்பு வழங்கும் மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான வழிபாட்டு உரிமையே இங்கு மீறப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினையை பார்லிமென்டில் எழுப்பி தேவையற்ற குழப்பம் உருவாக்கப்படுவதாகவும் எல்.முருகன் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
















