குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தி திருவாரூரில் பொது மக்களுடன் இணைந்து தவெகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் அழகிரி நகர், பனகல்சாலை, ஆறுமுகத்தோப்பு, சூரியகுளம், தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது, இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மழைநீர் வடிகாலை உரிய முறையில் பராமரிக்காத காரணத்தினால் தான் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கூறி அப்பகுதி மக்களுடன் இணைந்து தமிழக வெற்றி கழகத்தினர் மரியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
















