தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் 52 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் காணப்படுகிறது.
அங்குள்ள ஹியூ என்ற நகரில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வியட்நாமில் இதுவரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்று, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடைவிடாது பெய்யும் மழை காரணமாக, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அனைத்தும், வெள்ளத்தில் மிதக்கிறது. மழை பாதிப்பில் இதுவரை 52 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அவர்களும் இறந்திருக்க கூடும் என, அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தொடர் மழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. சாலைகள் அடித்து செல்லப்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 2 கிராமங்களை இணைக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம், பெரு வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள், இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
















