தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்து, திங்கள்கிழமை வாய்மொழித் தேர்வில் பங்கேற்று சிறப்பாக நிறைவு செய்தார். திருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வியியல் துறையில், “இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உடலியக்க செயல்பாடு” என்ற தலைப்பில் 2021 முதல் அவர் ஆய்வை மேற்கொண்டு வந்தார்.
கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பங்கேற்று தனது ஆய்வறிக்கையை விளக்கினார். ஆய்வறிக்கையை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் புறத் தேர்வாளர் எஸ். திருமலைக்குமார் பெற்றுக்கொண்டார். இவ்வாய்வுக்கு தேசியக் கல்லூரி துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் பிரசன்ன பாலாஜி வழிகாட்டியுள்ளார்.
ஆய்வின் மூலம், உடற்கல்வி மற்றும் உடலியக்க செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் தாக்கம், கணினிசார் நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் கற்றல் மேம்பாட்டில் ஏற்படுத்தும் பயன்கள் என இரு துறைகளின் ஒருங்கிணைப்பை ஆராய்ந்து தெளிவான பகுப்பாய்வுடன் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆட்சிச் சபை ஒப்புதல் அளித்த பின், அமைச்சர் முனைவர் பட்டம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த ஆய்வு, கல்வித் துறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு புதிய பாதையை அமைக்கும் முயற்சியாக மதிக்கப்படுகிறது.
















