அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக நிர்வாகவியல் துறை மற்றும் ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) இணைந்து “வணிக தொடர்ச்சியை உருவாக்குதல்: காலநிலை மீள்தன்மை மற்றும் தகவமைப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்தியது. வணிகத் துறையில் காலநிலை மாறுபாடுகள் ஏற்படுத்தும் தாக்கங்களையும், அவற்றை சமாளிக்க நிறுவனங்கள் உருவாக்கவேண்டிய உத்திகளையும் மையமாகக் கொண்டு இந்த கருத்தரங்கு நடைபெறியது.
நவம்பர் 5-ஆம் தேதி AUDBA அரங்கில் நடைபெற்ற துவக்கவிழாவில் துறைத் தலைவர் பேராசிரியர் வானதி வேம்பார் வரவேற்புரை வழங்கினார். கலைப்புல முதல்வர் பேராசிரியர் எம். அருள் விழாவிற்கு தலைமை தாங்கி, வணிக தொடர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, காலநிலை அபாயங்களை வரைபடமாக்குதல், விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், அவசரகாலத் திட்டங்கள் உருவாக்குதல் போன்ற அம்சங்கள் நிறுவனங்களுக்கு நீண்டகால நம்பகத்தன்மையை வழங்கும் என்பதை எடுத்துரைத்தார்.
துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். அறிவுடைநம்பி கருத்தரங்கினைத் தொடக்கி வைத்து, தற்போதைய வணிகச் சூழலில் நிலவும் சவால்களை சிறப்பித்தார். தீவிரமான வானிலை மாற்றங்கள், இயற்கை இடையூறுகள் போன்ற அபாயங்களுக்கு எதிராக செயல்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்கி வணிகத்தை பாதுகாப்பது, புதிய காலநிலைகளுக்கு ஏற்ப நிறுவன உத்திகளை மாற்றியமைத்தல் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
விழாவின் இறுதியில் முனைவர் ஆர். நாராயணன் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கு இணை இயக்குநர் முனைவர் டி. திலீபன், கருத்தரங்க அமைப்பாளர்கள் பேராசிரியர்கள் முனைவர் கே. சிவகுமார், முனைவர் ஜி. லதா, முனைவர் ஜே. ஜான் அடைக்கலம், முனைவர் எம். தேவநாதன், முனைவர் எம்.டி. செந்தில்குமார், முனைவர் எம். பாலமுருகன் ஆகியோர் கருத்தரங்கின் திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகளை செய்தனர். அத்துடன், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் எஸ். கார்த்திக், ஏ. ஜோன்ஸ் ஓஷின், வி. ஆர்த்தி, பி. மஞ்சு, அகிலா ஸ்டீபன், எஸ். பூஜா, எம். விக்னேஷ், எஸ். பிரியங்கா ஆகியோரும் விழா மற்றும் அமர்வுகளுக்கான ஏற்பாடுகளில் பங்கு பெற்றனர்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றம், வணிக மேலாண்மை, தழுவல் உத்திகள், பொருளாதார பாதுகாப்பு ஆகிய துறைகளின் மீதான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாறிவரும் காலநிலைச் சூழல்களுக்கிடையே வணிக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தடை இல்லாமல் முன்னெடுக்க தேவையான வழிமுறைகள் குறித்து வழிகாட்டும் சிறந்த மேடையாக இந்த கருத்தரங்கு அமையப்பட்டது.












