முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கும் பெற உதவும் வகையில் உருவாக்கியுள்ள அன்புச்சோலை திட்டத்தை நாளை நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
அன்புச்சோலை திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், அவர்களின் வளர்ச்சியில் சமூக மையங்களாக அன்புச் சோலை திட்டம் திகழும் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

















