பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகார் குறித்து, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, ஜாய் கிரிசில்டா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மகளிர் ஆணையம் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், பிறந்த குழந்தை தன்னுடையது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா கூறினார். பின்னர், குழந்தையின் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பெயராக மாதம்பட்டி ரங்கராஜ் என பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், “தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்” என்று விளக்கம் அளித்ததுடன், “டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை எனது என நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது புகாரின் பேரில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிசில்டா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு பதிலளிக்க வரும் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.















