கால்பந்துலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன் நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளிவந்த சில நிமிடங்களிலேயே, உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதானாலும், இன்னும் ஆட்டத்திறனில் முந்திக்கொண்டே இருக்கும் ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த பேட்டியில்தான் ரொனால்டோ இந்த திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், “போர்ச்சுகல் அணியை உலகக் கோப்பை வெற்றியாளர்களாக்குவது என் கனவு. அதே சமயம், ஜார்ஜினாவுடன் என் வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகக் கோப்பையை கைப்பற்றும் நாளில் தங்கள் திருமண விழாவை நடத்தும் எண்ணமும் உள்ளதாக கூறியுள்ளார்.
ரொனால்டோவுக்கும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கும் தற்போது ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டு குழந்தைகள் ஜார்ஜினாவுடன் பெற்றவர்கள் அலானா மார்ட்டினா (2017) மற்றும் பெல்லா எஸ்மெரால்டா (2022). பெல்லா பிறக்கும் போது அவருக்கு இரட்டையாக பிறந்த ஆண் குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள மூன்று குழந்தைகள் கிறிஸ்டியானோ ஜூனியர், ஈவா மரியா, மற்றும் மாடியோ வாடகைத் தாய் மூலம் பிறந்தவர்கள். அவர்களின் தாயார் யார் என்பதை ரொனால்டோ இதுவரை ரகசியமாக வைத்துள்ளார். தற்போது அனைவரையும் ஒரே குடும்பமாக அன்புடன் வளர்த்து வருகிறார் அவர்.
இந்த நிலையில், ரொனால்டோவின் திருமண அறிவிப்பு சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. “போர்ச்சுகல் உலகக் கோப்பை வெல்வதும், ரொனால்டோ திருமணம் செய்வதும் இரண்டும் கனவாகவே போய்விடுமோ!” என ரசிகர்கள் பகடிச் சொற்களை பதிவிட்டு வருகின்றனர்.


















