பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரால் கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் இருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தற்போது ஆண் குழந்தைக்கு தாயானுள்ளார்.
ரங்கராஜ், ‘மெஹந்தி சர்கஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததுடன், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். இவரது மனைவி ஸ்ருதி மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்தபோது, ஜாய் கிரிசில்டா தன்னுடன் திருமணம் செய்து ஏமாற்றியதாக 2023ஆம் ஆண்டில் புகார் அளித்திருந்தார்.
அப்போது, தாம் கர்ப்பமாக இருப்பதாகவும், ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தன்னை பலமுறை கருவிழப்புக்கு உட்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தன்னுடைய கர்ப்பகால மருத்துவச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக மாதம் ரூ.6.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், குழந்தை பிறந்தது தற்போதைய விவகாரத்திற்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
 
			















