பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள, கீர்த்தீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படம் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களுக்கு அடுத்தடுத்து, இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனையையும் எட்டியிருக்கிறது.
இந்த வெற்றியை ஒட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ‘டியூட்’ படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, இயக்குநர் கீர்த்தீஸ்வரனை பாராட்டியுள்ளார்.
திருமாவளவன் தனது பாராட்டுச் செய்தியில் கூறியதாவது :
“காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஆணவக் கொலைகளை எதிர்த்து வலுவான சமூகச் செய்தியைக் கூறுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எல்லைகள் தேவையில்லை — இரண்டு மனங்கள் போதுமானது என்ற எண்ணத்தை படம் வெளிப்படுத்துகிறது.
கீர்த்தீஸ்வரன், ஜென் Z தலைமுறையின் மனநிலையையும் அவர்களின் உணர்வுகளையும் ஆழமாகப் புரிந்துகொண்டு திரைக்கதை அமைத்துள்ளார். நட்பு மற்றும் காதல் குறித்த நுணுக்கமான பார்வையையும் சிறப்பாக கையாள்ந்துள்ளார்.”
அவர் மேலும் கூறியதாவது: “படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாவுங்கடா’ என்ற வசனம், சாதிய அகந்தைக்கு எதிராக நேரடியான அடியாக உள்ளது. அது சமூகத்தில் உள்ள ஆணவக் கொலை மனோபாவத்துக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குகிறது. ஒரு வலுவான செய்தியை எவ்வளவு அழகாகவும், இந்த தலைமுறை புரிந்துகொள்ளும் பாணியிலும் சொல்ல முடியும் என்பதற்கே இந்தப் படம் சான்று.”
திருமாவளவன், ‘இயக்குனர் கீர்த்தீஸ்வரனின் படைப்பாற்றலும், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும், குழுவின் ஒத்துழைப்பும் இந்த தலைமுறையினருக்கு நம்பிக்கையளிக்கும் அளவுக்கு சிறப்பாக உள்ளன’ என்றும் பாராட்டியுள்ளார்.

















