பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாகிஸ்தான் அரசு “பயங்கரவாதிகள் பட்டியலில்” சேர்த்ததாக கூறப்படும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் மூன்று தசாப்தங்களாக ஹிந்தி திரையுலகில் முன்னணியில் திகழும் சல்மான் கான், அண்மையில் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “இந்தி திரைப்படங்கள் சவூதியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுகின்றன. அதேபோல் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களும் பெரும் வசூலைப் பெற்று வருகின்றன. இதற்குக் காரணம் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வந்த மக்கள்தான்” என தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் போது சல்மான் “பலுசிஸ்தான்” என்பதை தனி பிரதேசமாகக் குறிப்பிட்டிருப்பது பாகிஸ்தான் அரசை கடும் எரிச்சலடையச் செய்துள்ளது. ஏனெனில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் தற்போது தனி நாட்டாக அறிவிக்கப்பட வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதனால் சல்மான் கானின் கருத்து பாகிஸ்தானின் “ஒருமைப்பாட்டுக்கு எதிரானது” எனக் கூறி, அவரை தீவிரவாதக் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக அங்குள்ள சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால், குறித்த நபரை கண்காணிப்பது, அவரின் நாட்டுக்குள் நுழைவை கட்டுப்படுத்துவது, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது போன்ற அதிகாரங்களை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறைகள் பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் விவாதம் வெடித்து வருகிறது.
 
			















