நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து, சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மேற்கொண்ட தனித்துவமான ஆராய்ச்சிக்காக, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் (2023, 2024, 2025) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சேவியர் பப்ளிஷர்ஸ் ஒவ்வொருவருடமும் வெளியிடுகின்றனர்.
டாக்டர் அசோக்குமாரின் ஆராய்ச்சிகள் கழிவு மேலாண்மை, மாசுபாட்டைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க மற்றும் சுத்தமான எரிசக்தி தீர்வுகள் போன்ற துறைகளில் மையமாக உள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல், நவீன கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி உயிரி எரிசக்தி உருவாக்குதல் போன்ற பணிகள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளன.
இவர் இதுவரை 130-க்கும் மேற்பட்ட சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் 18-க்கும் மேற்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது டாக்டர் அசோக்குமார், சென்னையில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் (SIMATS) கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தில் பேராசிரியர் மற்றும் தலைவராக பணியாற்றி வருகிறார். இதுவரை தாய்லாந்து, மலேசியா மற்றும் தென் கொரியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
டாக்டர் அசோக்குமார், முனைவர் பட்டத்தை 2013-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். முனைவர் பட்டத்திற்கு முன்பு, அவர் தாவர உயிரி தொழில்நுட்பத்தில் MSc மற்றும் MPhil பட்டங்களை பெற்றிருந்தார். முனைவர் பட்ட காலத்தில் இவர் இந்தோ-ஆஸ்திரேலிய பெல்லோஷிப் மூலம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
மேலும், அவர் பல சர்வதேச அறிவியல் இதழ்களுக்கு கெஸ்ட் எடிட்டர் மற்றும் மதிப்பாய்வாளர் ஆகவும், உலக உயிரி ஆற்றல் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகவும் செயல்படுகிறார்.
ஸ்டான்போர்ட்-எல்சேவியர் பட்டியல் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மேற்கோள்கள், சமூகத்தில் தாக்கம் மற்றும் துறைக்கு அளிக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் இடம் பிடித்துள்ள டாக்டர் அசோக்குமாரின் சாதனை, இந்திய விஞ்ஞானத்தின் சர்வதேச அளவில் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.
இந்த சாதனை, தமிழ்நாட்டின் திறமையையும் உலக அளவில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அவரது தொடர்ச்சியான பங்களிப்புகள், இந்தியாவின் நிலையான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் முக்கிய உதாரணமாகும்.
 
			















