நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி இன்று காலமானார். அவரது மறைவு, தொகுதி மக்களுக்கும் திமுகவிற்கும் பெரும் இழப்பாகும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுசாமி, அண்மையில் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மார்வலி ஏற்பட்டது. உடனடியாக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சுவாச மண்டலத்தில் கடுமையான அடைப்பு ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
பொன்னுசாமியின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
“சேந்தமங்கலம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பணி ஆற்றிய அருமை சகோதரர் திரு. கு. பொன்னுசாமி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. திமுகவின் மீதான பற்றும், கலைஞர் அவர்களின் சிந்தனையிலும், என்மீதும் கொண்ட அன்பும், அவரை மக்களின் மனதில் இடம் பிடிக்கச் செய்தது. பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பணிகள் நினைவில் நிலைத்திருக்கும். அவரது மறைவு, தொகுதி மக்களுக்கும் திமுகவிற்கும் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் கழக தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
முதலில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்திருந்த பொன்னுசாமி, 2003 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவுக்கு திரும்பினார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2011 தேர்தலில் தோல்வியடைந்த அவர், 2021 ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றி பெற்று சேந்தமங்கலம் தொகுதியின் மக்களுக்காக பணியாற்றி வந்தார்.
அவரது திடீர் மறைவால், அரசியல் வட்டாரங்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளன. பல்வேறு கட்சி தலைவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
			















