வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் தாக்கத்தால் மாநிலத்தின் வடகிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதையடுத்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
வானிலை மையம் வெளியிட்ட புதிய தகவலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், மக்கள் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
			

















