“அல்வா பாக்கெட் வைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் அவரே” என மாநில அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் இருமல் மருந்து விஷப்புகை சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ‘திமுகவின் உருட்டு கடை அல்வா’ என அச்சிடப்பட்ட அல்வா பாக்கெட்டுகளை வழங்கி, “திமுக ஆட்சியில் மக்கள் பெற்றது உருட்டு கடை அல்வா தான்” என விமர்சித்தார். மேலும், 2021 தீபாவளியில் வெளியிடப்பட்ட 525 அரசுத் திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேறவில்லை என குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “அல்வா பாக்கெட் வைத்து அரசியல் நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? செல்போன் கொடுப்போம் என்றார்கள், கொடுத்தார்களா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கத்தான் இப்போது அரசியல் செய்கிறார்,” என்று சாடினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது :
“அதிமுக ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவிடம், அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி கையில் எப்படி சென்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். அதிமுகவை திருட்டுக் கடையாக்கியது எடப்பாடிதான். இப்போது அல்வா பாக்கெட் வைத்து அரசியல் செய்கிறார். மக்களிடம் சென்று கேட்டால், திமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள்.”
அமைச்சர் மேலும் கூறியதாவது, “விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். திராவிட மாடல் 2.0 ஆட்சி உறுதியாகத் தொடரும். அரசின் மேல் குறை கூற முடியாமல், தோல்வி முகத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி,” எனத் தெரிவித்தார்

















