தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில், தனிச் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைக்கப்படுவதாகவும், அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு எதிராக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசு அமைத்துள்ள பல்வேறு குழுக்களால் இதுவரை மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறியதாவது: “திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்துள்ளன. குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக அலட்சியம் காட்டிய அரசே, இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப் போவதாகச் சொல்லுவது மக்கள் கண் துடைப்பாகும்.
மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான குழு கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் மூன்று முறை மட்டுமே கூடியுள்ளது. அந்தக் குழு குறித்து ஏன் முதலமைச்சர் பேசவில்லை ?
மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களும் செயலற்று இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு புதிய குழுவை அமைப்பது யாரை ஏமாற்ற?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
 
			

















