கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கான விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் நிகழ்வில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்தக் குழுவில் தமிழ்நாட்டில் பணியாற்றும், ஆனால் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சீமான்,
“கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் இனத்தையே அவமதிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும்,
“தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழந்த ஒரு சம்பவத்தின் விசாரணையில் தமிழ் நன்கு அறிந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்பதே சரியானது. தமிழர் நிலத்தின் வரலாறோ, அரசியலோ தெரியாத அதிகாரிகள் விசாரணை செய்வது தாமதத்தையும் தடங்கலையும் உண்டாக்கும்,” என்று தெரிவித்தார்.
சீமான் தனது அறிக்கையில்,
“மணிப்பூர் கலவரம், குஜராத் கலவரம், கும்பமேளா நெரிசல் போன்ற சம்பவங்களில் அந்நிலையினரல்லாத அதிகாரிகளை நியமித்தால் அந்த மாநில மக்கள் ஏற்கமாட்டார்கள். அதேபோல் தமிழர்களின் வழக்கில் தமிழ் அதிகாரிகளை விலக்குவது நீதியல்ல,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்,
“இந்த உத்தரவு தமிழர்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள இந்தக் கண்டன அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.