இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனாக உயர்ந்த சுப்மன் கில் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பு 26 வயதான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கில் 750 ரன்களுக்கு மேல் சேர்த்து, சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். அதேசமயம் கேப்டனாகவும் தன்னைத்தானே நிரூபித்தார். அந்த தொடரில் 2–2 என சமநிலை பெற்றது இந்திய அணிக்குப் பெருமை சேர்த்தது.
தொடர்ந்து உள்நாட்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றியைப் பெற்றது. குறிப்பாக முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதனால் கில்லின் கேப்டன்ஷிப் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், சுப்மன் கில் குறித்து இயன் பிஷப் தெரிவித்துள்ளார் :
“கேப்டனாக கில் இன்னும் முழுமை பெறவில்லை. அவரிடம் பொறுமையும், அணியை ஒருங்கிணைக்கும் திறனும் இருக்கிறது. ஆனால் ஒரு கேப்டனாக யுக்திகளை அமைப்பதில் இன்னும் அனுபவம் தேவை. குறைந்தது இரண்டு சீசன்களாவது கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இருக்கும். கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அவருக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கில்லுக்கு இன்னும் சிறிது நேரமும் வாய்ப்பும் கொடுக்க வேண்டும்,” என பிஷப் கூறினார்.
சுப்மன் கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார்.