மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வரவுள்ள புதிய படம் ‘பைசன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன் மற்றும் துருவ் விக்ரம் கலந்து கொண்டனர்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, “முன்னர் நான் பரியேறும் பெருமாள் படத்தில் வாய்ப்பு பெற்றிருந்தேன். ஆனால் கால சீட் பிரச்சினை காரணமாக செய்ய முடியவில்லை. அதை பற்றி மிகுந்த வருத்தம் இருந்தது. பிறகு அந்த படத்தைப் பார்த்து, நான் மாரி செல்வராஜ் ரசிகையாக மாறினேன். பைசன் படத்தில் நான் அனுபவித்த அனுபவம் என்னை இன்னும் வித்தியாசமாக மாற்றியது.”
நடிகை ரெஜிஷா விஜயன் தனது அனுபவத்தை பகிர்ந்து, “கர்ணன் படத்திற்கு பிறகு இயக்குனருடன் மேலும் பணியாற்ற வாய்ப்பு கேட்டேன். பைசன் படத்தில் சில நீச்சல் காட்சிகள் இருந்தது. அதைச் செய்வதில் சவால் இருந்தாலும், இயக்குனர் எனக்கு முழு ஆதரவு தந்தார். படத்தில் நாங்கள் நடிப்பிலும், நிஜ வாழ்விலும் நன்றாக நண்பர்கள் ஆகிவிட்டோம். துருவ் விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார், படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் ஒரு புதிய சூப்பர் ஸ்டார் உருவாக வாய்ப்பு உள்ளது” என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இந்த படத்தின் கதையை உருவாக்கிய முக்கிய காரணம் மானத்தி கணேசன். இவரின் வாழ்க்கை, நேர்மையான உழைப்பு மற்றும் போராட்டங்களை அடிப்படையாக வைத்து இளைஞர்களின் வாழ்க்கையை அரசியல் பார்வையில் சொல்லியுள்ளேன். திருநெல்வேலியில் நிகழும் சூழலை இளைஞர்களிடம் கடத்த இந்த கதையை எழுதியுள்ளேன். வெற்றி பெற்றோரும், பெற முடியாதோரும் அனைவரின் கதை இதில் இடம்பெற்றுள்ளது. இது என் உச்சபட்ச எமோஷனலும் கர்வமும் கொண்ட படம். தமிழ் மக்கள் இதனை எப்படி பார்ப்பார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.