கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாக கூறப்படும் வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களான கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த லட்சுமி மேனன், ரசிகர்கள் மத்தியில் தனித்த ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் எர்ணாக்குளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த வழக்கில், ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நடிகையை கைது செய்வதை தற்காலிகமாக தடை செய்யும்படி கேரளா உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டது.
பின்னர், சம்பந்தப்பட்ட ஐடி ஊழியர் தரப்பினர் “இருதரப்பும் சமரசமாகிவிட்டது” என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நடிகை லட்சுமி மேனன் கடைசியாக நடித்தது சப்தம் திரைப்படம் ஆகும். அதற்கு முன்னர் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் மலை திரைப்படம் உருவாகி வருகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், கும்கி படத்துக்காக அவர் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருந்தார்.