கரூர் :
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் ஒரு தனிமனிதரின் செயலால் 41 உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்காதபடி சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது : “ஹரி நாடார், சவுக்கு சங்கர், நேதாஜி மக்கள் கட்சி வரதராஜன் ஆகிய மூவரும் அடிப்படை ஆதாரம் இல்லாமலே நீதித்துறையை குறைத்து பேசுகின்றனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் நான் புகார் அளித்துள்ளேன். சவுக்கு சங்கர் பணம் வாங்கி பேசுகிறார்; வரதராஜன் நீதிபதிகளை அவதூறாக விமர்சிக்கிறார்” என்றார்.
பின்னர் நடிகர் விஜயின் ரசிகர்களை குறித்தும் அவர் கடுமையாக பேசியுள்ளார். “கரூரில் உயிரிழந்தவர்களுக்கு காரணமான தவெக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தேடப்படுகிறது. நடிகர் விஜய்மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு தமிழக மக்கள் தாமே தண்டனை வழங்க வேண்டும். விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள், காதலிக்காதீர்கள். அதுவே நாமளால் அவர்களுக்கு தரப்படும் தண்டனை. அவர்கள் பெண்களை பெற்றால் புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவார்கள்,” என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹேமமாலினி கரூருக்கு வந்தார்; ஆனால் அவருக்கு நம் மொழியே புரியாது. மொழியே புரியாதவருக்கு நம் வலி எப்படி புரியும்? பாஜகவினர் தமிழக மண்ணில் எண்ணெய் ஊற்றி பிரண்டாலும் மண் ஒட்டாது. அப்படியான மண்ணில் எங்கள் மக்களுக்கு அவர்கள் எப்படி ஒட்டப் போகிறார்கள்?” என அவர் ஆவேசமாகக் கூறினார்.