உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீசி தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் பார் கவுன்சில் மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவிலில் 7 அடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவ உத்தவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, இது முற்றிலும் விளம்பரத்திற்கான வழக்கு என்று குறிப்பிட்டார். மேலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ள நீங்கள், அவரிடமே சென்று இதுபற்றி முறையிடுங்கள் எனவும் கூறியிருந்தார்.
இதனை கேட்டு அதிருப்தி அடைந்திருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீசி தாக்க முயன்றார். உடனடியாக காவல்துறையினர் அவரை பிடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் எந்தச் சலனமும் அடையாத தலைமை நீதிபதி கவாய், இத்தகைய செயல்கள் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றார்.
இதனிடையே, வழக்கறிஞர் மீது புகார் அளிக்க உச்சநீதிமன்ப் பதிவாளர் மறுத்ததால், 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு போலிசார் அவரை விடுவித்தனர். தலைமை நீதிபதி அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றபோதிலும், இந்திய பார்கவுன்சில், ராகேஷ் கிஷோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் அவர் வழக்காடுவதற்கும் தடைவிதித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல், சோனியா, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.