சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயத்தின்போது, வண்டியின் சாரதி ஒருவர் எதிரே வந்த காரினை தாண்டி சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தய தூரத்தை கடக்க, மாட்டுவண்டிகள் சாலையில், மின்னல் வேகத்தில் சென்றன.சத்யா என்ற இளைஞர் மாட்டு வண்டியின், துணை சாரதியாக, சாலையில் ஓடி வந்தார். காளாப்பூர் என்ற இடத்தில், மாட்டு வண்டிக்கு எதிரே கார் வந்துவிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் உடனே சினிமா ஸ்டண்ட் கலைஞரை போல் ஒரு நொடியில் காரின் மீது ஒரு கால் வைத்து தாவிக்குதித்தார். இதுதொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் சத்யாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், காரின் மேற்கூரை, லேசாக சொட்டையாகிப்போனது.