பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சொத்துகளை தனது பெயரில் மாற்றித் தருமாறு அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தகராறு நிலவி வந்தது.
சம்பவத்தன்று, ஹர்ஜீத்கவுர் தனது மாமியாரை கொடூரமாக தாக்கினார். தலைமுடியைப் பிடித்து இழுத்தும், மீண்டும் மீண்டும் அடித்தும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பார்த்த அவரது மகன் அதிர்ச்சியடைந்து, “அம்மா, பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள்” என கெஞ்சினான். ஆனால், ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்கினார்.
வேதனையடைந்த சிறுவன் அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தான். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
இந்த நிலையில், பஞ்சாப் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.