திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு வந்த பெண்ணை இடைமறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இரு காவலர்களையும் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியில் இருக்கும் காவலர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டது சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது :
“பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவலநிலையின் கொடூர உச்சமே இந்தச் சம்பவம். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளால் பெண்கள் கூட தங்களை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெட்கக்கேடான சூழ்நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தலைகுனிய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை வன்கொடுமை சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து தமிழகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

















