காஸா :
காஸாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள், உலகளாவிய மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளன. “பேரழிவு” என்ற சொல்லே இங்கு அர்த்தத்தை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தினந்தோறும் வெளிவரும் காட்சிகள் உலகின் மனசாட்சியை உலுக்குகின்றன – உடல்நலமின்றி பசி தாங்கும் குழந்தைகள், இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், மூத்தவர்கள் சுருண்டு கிடப்பது போன்ற துயரக் காட்சிகள் அங்கிருந்து வெளியாகின்றன. ஒருபுறம் தாய் தனது குழந்தையை தேடி அழுது அலைய, மறுபுறம் ஒரு தந்தை தனது மகளுக்கு கடைசி துண்டு உணவை வழங்கி தானே பசியை மறந்து நிற்கிறார்.
ஹமாஸை அழிப்பதற்காக நடவடிக்கை எடுக்கின்றதாகக் கூறும் இஸ்ரேல், காஸா நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டுள்ளனர். படுக்கைகள், உடைமைகள் அனைத்தையும் சுமந்து கொண்டு, எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமின்றி மக்கள் இடம்பெயர்கின்றனர்.
”நாங்கள் எங்கு சென்றாலும் குண்டு வீசப்படுகிறது. புதைகுழியைத் தவிர எங்களுக்கு இடமில்லை” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு குடும்பத்தையும், ஒரு கனவையும் சிதைத்துவிட்டது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலைமை குறித்து சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நடத்தியுள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பதாக அறிவித்துள்ளன. “இந்த பேரழிவை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்ற கோரிக்கை பல நாடுகளிடமிருந்தும் எழுந்துள்ள நிலையில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் மாறாமல் தொடர்கின்றன.