திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என எதிரிகள் பரப்பி வரும் நிலையில், கூட்டணியில் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மொழி உரிமை மற்றும் மாநில உரிமையை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், மத்திய அரசு மாநிலத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், திமுகவை வீழ்த்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதால், நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த உதயநிதி, “அவருக்கு கார் மாறுவதும், கால் மாறுவதும் புதிதல்ல” எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்களில் மக்கள் வருகை குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தைப் பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு, தொழில்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதாகவும் விளக்கமளித்தார்.