விருதுநகர் : திமுக இளைஞர் அணியின் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் தொகுதியில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று விருதுநகரில், திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தனது கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது : “எதிரிகள் திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று பல தேர்தல்களில் கூறியிருந்தாலும், நமது கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 234 தொகுதிகளிலும் கலைஞர் போட்டியிடுவார் என நினைத்து முழுமையாக களப்பணியில் ஈடுபட வேண்டும். விரைவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.
முதல்வர் ஒப்புக்கொண்டால், நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிட தயார். தமிழகத்தை ஒன்றிய பாஜகவிடமிருந்து பாதுகாக்கும் வகையில், அடுத்த 6 மாதங்களில் கவனமாக செயல்பட வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.