இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் திராஹ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மாத்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலின் பேரில், இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை எட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்தோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சொந்த மக்கள் மீது இவ்வாறு விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் நடைபெற்ற மாத்ரே தாரா கிராமம், ஆப்கான் எல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், ஜெய்ஷ்-இ-முகம்மது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை இப்பகுதிக்குள் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.