கடந்த சில மாதங்களாக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் எம்பி மற்றும் செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ் திடீரென திமுகவில் இணைந்துள்ளார். இதை அவர் தனிப்பட்ட கருத்தில் வெளியிட்டுள்ளார்.
மருது அழகுராஜ் கூறுகையில், “ஜனநாயகத்திற்கு புறம்பாக அதிமுகவை அபகரித்திருக்கும் எடப்பாடியால் வஞ்சிக்கப்படுவோருக்கு அறிவாலயம் தான் அன்புச் சரணாலயம். முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திமுகவுக்கு பவளவிழா நடத்துகிறார். கூவத்தூர் குத்தகைக்காரரோ அதிமுகவுக்கு பிளவுவிழா நடத்துகிறார். எப்படியோ, சேயை தாயோடு இணைக்கும் சரித்திர சந்தர்ப்பத்தை எடப்பாடி ஏற்படுத்தி இருக்கிறார் என்பது உண்மை” என தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, மைத்ரேயன் போன்றோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் அணியுடன் நீண்ட காலம் பணியாற்றிய மருது அழகுராஜ், தற்போது திமுக பக்கம் சேர்ந்ததன் மூலம் கட்சியின் முக்குலத்தோர் சமூக ஆதரவை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கணிக்கப்படுகிறது.
மருது அழகுராஜ், “ஆட்சியையும் சிறப்பாக நடத்திக் கொண்டு, கட்சியையும் ஒற்றுமையாக வைத்துக் கொண்டு, கூட்டணியையும் எந்த பிளவுமின்றி ஸ்டாலின் முன்னெடுக்கக் கூடிய அரவணைப்பு அரசியலைப் பாராட்டுகிறேன். இதனால் திமுக எனக்கு பிடித்த இயக்கமாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.