ரஷ்யா: ரஷ்யாவின் கம்சாட்கா பிராந்தியத்தில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெட்ரோ பாவ்லோஸ்க் நகரத்துக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. சில நிமிடங்களுக்குள், 5.8 ரிக்டர் அளவிலான மறுமுறை அதிர்வும் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் பீதி அடைந்து ஓடினர். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கூட அதிர்வால் குலுங்கியதாக காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
தொடர் நிலநடுக்கத்தையடுத்து, கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. பின்னர் நிலைமை சீராகியதைத் தொடர்ந்து, அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
குறிப்பிடத்தக்க வகையில், இதே கம்சாட்கா பிராந்தியத்தில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், கடந்த ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியிருந்தது. அந்த 8.8 ரிக்டர் அதிர்வு, கடந்த 14 ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
















