தமிழகத்தில் நடைபெறும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் மருத்துவம், உழவர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
“தமிழகம் வளர்ச்சி திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து உள்ளனர். முதியோர் மற்றும் பழங்குடியினரைக் கொண்ட 1.57 லட்சம் பேரும் இக்குழுக்களின் மூலம் பலனடைந்துள்ளனர்.
மதிய உணவு திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 45 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி விகிதம் சிறப்பாக மேம்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், நமது அரசு தனது பங்குத்தொகையை தாமதமின்றி வழங்கி வருகிறது. அதுபோல் மத்திய அரசும் தன் பங்கான நிதியை சரியான நேரத்தில் வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தையும், சிறுசேரி சிப்காட்டில் ரூ.574 கோடி மதிப்பிலான புதிய நிறுவனத்தையும் தொடங்கி வைத்தார்.