‘கல்கி 2898 AD’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகி பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்திருந்தனர். நாக் அஷ்வின் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் தீபிகா படுகோனே இடம்பெறமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மிகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே இணைந்து பணியாற்றமாட்டார் என்று முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தில் அவருடன் இணைந்தது ஒரு நீண்ட பயணம். ஆனால் எதிர்காலத்தில் எங்களால் கூட்டாகச் செல்ல இயலவில்லை. ‘கல்கி’ போன்ற படம் முழுமையான அர்ப்பணிப்பை வேண்டுகிறது. தீபிகாவின் அடுத்த முயற்சிகள் சிறப்பாக அமைய எங்களது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளது.
முதல் பாகத்தில் சுமதி என்ற கர்ப்பிணிப் பெண்ணாக நடித்த தீபிகா, கதையின் மையமாகவே இருந்தார். எனவே அவர் விலகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பிரபாஸ் மற்றும் தீபிகா இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவியதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிரபாஸ் – சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து தயாரிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்தும் சம்பளம் மற்றும் வேலை நேரம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக தீபிகா விலகியிருந்தார். பின்னர், அந்த படத்தில் த்ரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், ஒரு பேட்டியில் தீபிகா, “எனக்கு சம அளவு மதிப்பளிக்காத நிலை இருந்தால் நான் ஏற்க மாட்டேன். என் வெற்றிகளையும் திறமையையும் நான் அறிவேன்” என கருத்து வெளியிட்டிருந்தார். இது, அந்த காலகட்டத்தில் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப்பை நோக்கி கூறப்பட்டதாக ஊகிக்கப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தீபிகா விலகலை உறுதி செய்தாலும், அவரது தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.