கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக துவக்க நாள் ஆகியவற்றை இணைத்து நடத்தப்படும் திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஸ்டாலின் பேசுகையில்,
“76 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை கட்சி மக்கள் நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது,” என்றார்.
“2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எதிரிகளை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளோம். இது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்,” என உறுதியளித்தார்.
“தமிழ்நாட்டின் காவல் அரண் திமுக மட்டுமே. காவி கொள்கை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும். அந்த கொள்கையின் அரசியல் முகம் பாஜக. அதற்காகவே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ‘No Entry’ தான்,” என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த அவர்,
“அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என்று அவரே கூறியுள்ளார். அந்த அரசை மக்கள் தூக்கி எறிந்தது திமுகவின் போராட்டத்தால்தான். இப்போது அதிமுகவின் தலைவர் திராவிடம் பற்றியே தெரியாதவர்,” எனக் குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம். ஒன்றிய அரசின் திணிப்புகளுக்கும், பாஜகவின் ஆதிக்க அரசியலுக்கும் எதிராக திமுக எப்போதும் போராடும். மொழி போராட்டம் போலவே, இன்று உரிமை போராட்டத்திலும் நாம் வெற்றி பெறுவோம்,” என்று வலியுறுத்தினார்.
முடிவில், திமுக தொண்டர்களிடம், “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்,” எனக் கூறச் செய்து உரையை நிறைவு செய்தார்.