வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் பல்வேறு சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி திருவான்மியூர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது நல்ல விஷயமே. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றங்கள் நிகழலாம்,” என்றார்.
அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டபோது, “எப்போதும் புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சனைகளுக்குப் பிறகு நல்ல தீர்வுகள் கிடைக்கும்,” என நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.
மேலும், டிடிவி தினகரன் மற்றும் பிற தலைவர்களின் விமர்சனங்கள் தொடர்பாக அவர், “அவர்கள் அரசியலில் நண்பர்களே. யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. பாஜக ஒருபோதும் பிற கட்சிகளின் பிரச்சனைகளில் தலையிடாது, ஆனால் நல்ல காரியங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வது வழக்கம்,” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை செவ்வனே அமைத்து வருகின்றன. இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் சமீபத்திய இந்தக் கருத்து, கடைசி நேர கூட்டணி மாற்றங்கள் சாத்தியமென்கிற அரசியல் சூழ்நிலையை மேலும் சுட்டிக்காட்டுகிறது.