பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் எந்தவொரு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தினார்.
1948ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நிஜாம் ஆட்சியில் இருந்த ஹைதராபாத் மாநிலம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு 2022 முதல் செப்டம்பர் 17ஆம் தேதியை “தெலுங்கானா விடுதலை நாள்” என அறிவித்துள்ளது. அதே நாளை தெலுங்கானா அரசு “தேசிய ஒருங்கிணைப்பு நாள்” எனக் கொண்டாடி வருகிறது.
இதற்காக செகுந்தராபாத் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் உரையாற்றியபோது,
“சிலர், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது மட்டுமே. மீண்டும் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தால், அந்த நடவடிக்கை தொடரும்” என்றார்.
மேலும், “ஆப்பரேஷன் சிந்தூரின் போது ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டது என்பதை அந்த அமைப்பு தானே ஒப்புக்கொண்டுள்ளது. இது நம் ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கான சான்றாகும். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பலம் பெற்றுள்ளது; இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் எந்த சக்தியும் நம்மை குலைக்க முடியாது” எனவும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

















