பாமக தலைமை அலுவலக முகவரி கபட நாடகத்தால் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது மோசடி மற்றும் ஏமாற்று வேலை என்றும், பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கட்சி உள்மோதல் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அன்புமணியின் தலைவர் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ராமதாஸ் தரப்பு அதை ஏற்க மறுத்து, “ராமதாஸ்தான் தலைவர்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து, ராமதாஸ் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், நிருபர்களை சந்தித்த ஜி.கே. மணி கூறியதாவது : “தேர்தல் கமிஷனின் கடிதத்தை காட்டி மக்களை நம்ப வைக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் மோசடி நேற்று நடந்தது. கடந்த ஜூலை மாதம் தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதத்தில், பாமக தலைவர் முகவரி ’10, திலக் தெரு, தி.நகர், சென்னை-17′ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாமக தலைமை அலுவலகத்தின் நிரந்தர முகவரி ’63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை’ ஆகும். இந்த முகவரியை மாற்றியிருப்பது ஏமாற்று வேலை மற்றும் கபட நாடகம்,” என அவர் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்தும், “2022ல் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2025ல் முடிவடைந்தது. அவர் பதவியில் இல்லாத நிலையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது விதிமுறைக்கு புறம்பானது. பாமக விதிப்படி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் எந்தக் குழுவும் செயல்படக்கூடாது. கடந்த மே மாத பொதுக்குழுவில் ராமதாஸ்தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, பாமக தலைவர் ராமதாஸ்தான்,” என வலியுறுத்தினார்.