தமிழகத்தில் நாய்க்கடி பிரச்சனை தீவிரமடைந்து, உச்ச நீதிமன்றம் கூட தலையிட்டு கேள்வி எழுப்பும் அளவுக்கு மாறியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக பொது சுகாதாரத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டில் இதுவரை மாநிலம் முழுவதும் 3.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் காரணமாக 22 பேர் உயிரிழப்பு
அறிக்கையில், சென்னை 8,000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் நோயின் தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன என கணிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புறங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன.
நாய்க்கடி தடுக்கும் வழிமுறைகள்
பொது சுகாதாரத் துறை, நாய்க்கடி தடுப்பு குறித்து சில முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது:
நாய் கடித்த காயங்களை உடனடியாக கிருமிநாசினியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாவிட்டால், ரேபிஸ் தொற்றைத் தவிர்க்க முடியாது.
நாய், பூனை, குரங்கு போன்ற விலங்குகள் கடித்தால், காயத்தின் ஆழம் மற்றும் தன்மையைப் பொறுத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சை :
விலங்கு நாக்கு மட்டும் சருமத்தைத் தொடும் போது (வகை 1) ஆபத்து இல்லை.
சிராய்ப்பு அல்லது மேற்பரப்பு காயங்கள் (வகை 2) ஏற்பட்டால், ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்.
ஆழமான காயங்கள் (வகை 3) ஏற்பட்டால், தடுப்பூசியுடன் சேர்ந்து Rabies Immunoglobulin (RIG) மருந்தும் செலுத்தப்பட வேண்டும்.
ரேபிஸ் தடுப்பூசி முதல் நாள், 3, 7, 21 ஆம் நாள் என மொத்தம் 4 தடவைகள் போடப்பட வேண்டும். இதில், RIG மருந்து முதல் நாளிலேயே தடுப்பூசியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டும்; தாமதமாக அல்லது தனியாக செலுத்தினால் பயனில்லை.
பொது சுகாதாரத் துறை எச்சரிக்கையில், “நாய் கடித்தால் உடனடியாக இவ்வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் ரேபிஸ் நோய் தவிர்க்க முடியாது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.













